Wednesday, November 2, 2011

விமர்சனம்

வேலாயுதம்


கிராமத்தில் குறும்புக்கார பால்காரன் விஜய். தங்கை சரண்யா மோகனுக்காக ஊரையே அதகளம் பண்ணுபவர். தங்கை திருமணத்துக்கு சென்னை பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டு வைத்திருக்கிறார். அதை எடுத்து, திருமணப் பொருட்கள் வாங்க பரிவாரங்களுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வேலாயுதம் என்ற ஹீரோவை ஊரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அமைதியை குலைக்க, சர்வதேச பயங்கரவாத கும்பல் திட்டமிடுகிறது. அதற்கு தமிழக அமைச்சரையே பயன்படுத்துகிறது. அவர், சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்கிறார். இவரது திட்டத்தை முறியடிக்க வேலாயுதம் என்ற ஹீரோ வருகிறார். யார் இந்த வேலாயுதம் என்று வில்லன் கோஷ்டி திணறுகிறது. மக்கள் ‘வேலாயுதமே துணை’ என்று தங்கள் ஹீரோவை கொண்டாடுகிறார்கள். பால்காரன் வேலாயுதத்துக்கும் காட்பாதர் வேலாயுதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆக்ஷன் திரைக்கதை.

தங்கை, மோதிரம் விழுந்துவிட்டது என்பதற்காக, கிணற்றில் தங்கம் இருப்பதாகச் சொல்லி ஊரையே தண்ணீர் இறைக்க வைப்பது, தங்கை வளர்க்கும் கோழியை பிடிக்க, ஊரையே புரட்டிப்போடுவது, தியேட்டரில் தங்கைக்கு பிடித்த ‘பாசமலர்’ பட காட்சியை திரும்ப திரும்ப போடச்சொல்லி வெறுப்பேற்றுவது என்று விஜய் அடிக்கும் கூத்துகள் வில்லேஜ் காமெடி. சென்னை வந்த பிறகு ஆக்ஷன் அதிரடி. தங்கையின் முருக்குப் பையை சந்தானம் திருடிவிட்டு ஓட, அவரைப் பிடிக்க விஜய் பைக்கை எடுத்துக் கொண்டு துரத்த, அதில் வெடிகுண்டு இருந்து வெடிப்பதும், ஜவுளிக் கடையில் வில்லன் கோஷ்டி சூட்கேசில் வெடிகுண்டு வைக்க, அதை எடுத்து வில்லன் இருக்கும் இடத்திலேயே விஜய் கொண்டு கொடுத்துவிட்டு வருவதுமாக, வில்லேஜ் வேலாயுதம் காட்பாதராக மாற்றப்படும் திரைக்கதை சுவாரஸ்யம். திருடனாக அறிமுகமாகி விஜயிடம் இருக்கும் பைனான்ஸ் பணத்தை திருட, அவருக்கு நண்பனாகும் சந்தானத்தின் லொள்ளுகள் படத்தின் கலகல ஏரியாவை திருடிக் கொள்கிறது.

ஜெனிலியா மரணத்தின் தருவாயிலும் தன் சமூக கடமையைச் செய்யும் பொறுப்புள்ள மீடியாகாரர். தான் உருவாக்கிய வேலாயுதம், விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு ஆச்சர்யப்படுவது, மக்களை காப்பாற்றும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை மறந்து விஜய் மீது காதல் கொள்வது, அவர் தன் மாமன் மகள் ஹன்சிகாவை விரும்புவதை அறிந்து சின்ன ஏமாற்றமாக கலங்குவது என பக்குவமாக நடித்திருக்கிறார். இவருக்கு நேர் எதிர் ஹன்சிகா. மாமா மாமா என்று விஜய்யை சுற்றி சுற்றி வருவதிலும், ஜெனிலியாவைக் கண்டு பொறுமுவதிலும் கொஞ்சமாக நடிக்கிறார். அவ்வப்போது முந்தானையை விலகவிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கவும் செய்கிறார். கொலைவெறியோடு வரும் அபிமன்யூ சிங் ஹீரோ கையில் அடிபட்டு சாகிறார். சரண்யா மோகன் வழக்கமான தங்கை என்றாலும் அழகில் ஜொலிக்கிறார். பாம் வெடித்து உயிர்விடும் காட்சியில் நம்மையும் கலங்க வைக்கிறார்.

சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் பிரமாண்டம். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை வேலாயுதத்தை முறுக்கேற்றுகிறது. ப்ரியனின் கேமரா கிராமத்தில் அழகாகவும், நகரத்தில் ஆக்ரோஷமாகவும் பணியாற்றி இருக்கிறது. அமைச்சராக வரும் வினித் குமாரின் தோற்றத்திலும், மேனரிசத்திலும் தெலுங்கு வாடை. எல்லையில் இருக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழ்நாட்டின் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. அண்ணன்-தங்கை சென்டிமென்ட் திருப்பாச்சியையும், ஸ்டேடியத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் அந்நியனையும் நினைவுபடுத்துகிறது. ‘தீமையை அழிக்க ஹீரோ வருவான்னு எதிர்பார்க்காம மக்கள் தங்கள் பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ள வழி காணணும்’ என்கிற மெசேஜ் இயக்குனர் டச். லாஜிக் எங்கே இருக்கிறது?, இது எப்படி சாத்தியம்? இப்படியெல்லாம் நடக்குமா? என்கிற கேள்விகளை மறந்து விட்டு பார்த்தால், ‘வேலாயுதம்’ பின்னுகிறார்.

No comments:

Post a Comment