Tuesday, February 24, 2015

அனேகன் விமர்சனம் 1960ல் பர்மாவில் ராணுவ கலவரம் ஏற்பட்டு, தமிழர்கள் அகதிகளாகத் திரும்பிய காலக்கட்டத்தில், சாதாரண கூலித்தொழிலாளி தனுசுக்கும், ராணுவ மேஜரின் மகள் அமைராவுக்கும் காதல் மலர்கிறது. கலவரமும், அமைரா தந்தையின் அதிகாரமும் அவர்களை ஜலசமாதியாக்குகிறது. 1980ல் வியாசர்பாடியில் தனுஷ் வடசென்னை அழுக்கு இளைஞனாக வும், அமைரா அக்ரஹாரத்துப் பெண்ணாகவும் பிறக்கிறார்கள். அமைரா மீது ஆசைப்படும் ஒரு பெரிய இடத்து மனிதனால், அவர்களுடைய காதல் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறது. பிறகு உலகத்துக்கே தெரியாமல் சமாதியாக்கப்படுகிறார்கள். பிறகு இந்தக்காலத்தில் தனுசும், அமைராவும், ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர்களாகப் பிறக்கிறார்கள். சந்திக்கிறார்கள், காதல்வசப்படுகிறார்கள். தனுஷ் தன் பூர்வஜென்ம காதலன் என்று, கனவுகளின் மூலம் அமைராவுக்கு தெரிய வருகிறது. முன்ஜென்மங்களில் காதலுக்கு வில்லன்களாக இருந்தவர்கள், இந்த ஜென்மத்திலும் வாழ்கிறார்கள். பிறகு அவர்களால் இந்த ஜென்ம காதலுக்கு வரும் ஆபத்தும், அதை காதலர்கள் எப்படி கடக்கிறார்கள் என்பதும் பரபரப்பான கிளைமாக்ஸ்.முன்ஜென்ம காதல், பர்மா கலவரம், வடசென்னை தாதா கலாசாரம், ஐ.டி நிறுவன மர்மங்கள் என வெவ்வேறு கதைக்களங்களில் ஒரே காதல் கதையை மிக நேர்த்தியாகச் சொல்லி, அதில் பல திடீர் திருப்பங்கள் வைத்து பரபரப்பாக்குகிறார், இயக்குனர் கே.வி.ஆனந்த். மன்னர் காலத்து இளமாறன், பரட்டைத்தலை பர்மா முருகன், வியாசர்பாடி காளி, ஐ.டி இளைஞன் அஸ்வின் என, பேச்சு மற்றும் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார் தனுஷ்.மன்னர் காலத்து செண்பகவல்லி, பர்மா சமுத்ரா, வியாசர்பாடி கல்யாணி, ஐ.டி மதுமிதா என, நன்கு நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். கார்த்திக்கின் ரீ&என்ட்ரி செம மாஸ். ஐ.டி நிறுவன அதிபராக, அதிரடியாக வந்து கைத்தட்டல் அள்ளுகிறார். ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை பிரமாதம். ‘டங்கா மாரி’ பாடல் ஆட வைக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, கிளாஸ். ஜென்மங்கள் பற்றிய கதையில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை என்றாலும், நிகழ்காலத்தில் வாழும் அமைராவுக்கு பூர்வஜென்மத்து ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்போது, மெயின் வில்லன் அருகில் இருந்தும், இவன்தான் போன ஜென்மத்தில் தங்களைக் கொன்றவன் என்று அடையாளம் காண முடியாமல் போவது ஏன்? வியாசர்பாடி எபிசோடில், 1980களுக்கே உரிய பீரியட் விஷயங்கள் மிஸ்சிங்.

No comments:

Post a Comment