ஷமிதாப்
பிறவியிலேயே பேச முடியாத கிராமத்து இளைஞன் டேனிசுக்கு (தனுஷ்) சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். சினிமாவில் போராடி தோற்று முடங்கிக் கிடக்கிறார் அமிதாப். இந்த இருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிறார் சினிமா துணை இயக்குனர் அக்ஷரா ஹாசன். சினிமா வாய்ப்பு தேடும் தனுஷிடம் இருக்கும் அபார திறமையை கண்டுபிடிக்கும் அவர், அவருக்கான குரலைத் தேடுகிறார். அப்போதுதான் கணீர் குரல் அமிதாப்பை கண்டு பிடிக்கிறார்.
அமிதாப் பேசினால் அது தனுஷின் தொண்டை வழியாக ஒலிக்கும் நவீன தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. மூவரும் நடத்தும் ரகசிய டிராமாவில் தனுஷ் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆகிறார். பணமும் புகழும் கொட்டுகிறது. அப்போது தனுஷ், அமிதாப் இடையே ஈகோவும் தலை தூக்குகிறது. இருவரும் தனித்தனியே வெற்றிக்கு உரிமை கொண்டாட கூட்டணி உடைகிறது. இருவரையும் இணைக்க அக்ஷரா போராடுகிறார். அந்த போராட்டம் வெற்றி பெறுகிறதா என்பது மீதிக் கதை.
குரல் வராமலும் தவிப்பதிலும், இரவல் குரலில் அதிர வைப்பதிலும் தன்னைத் தானே நொந்து கொள்வதிலுமாக தனுஷ் ஒவ்வொரு தமிழனையும் வடக்கு நோக்கி காலரை தூக்கி விட்டுக் கொள்ள வைக்கிறார். அமிதாப் என்ற சிங்கத்தின் குகைக்குள் புகுந்து குட்டிக்கரணம் அடித்து திரும்புகிறது இந்த மான்குட்டி. நம்ம ஊர் சிவாஜி தமிழ் மாதிரி அமிதாப்பின் இந்திதான் படத்தின் ஜீவநாடி. ஒரு மொழியை எல்லோரும் பேசலாம்.
ஆனால் அந்த மொழியை பேச வைக்கிற கலைஞன் அமிதாப். படத்தின் கதை ஈகோவா இருந்தாலும் ஒரு தென்னிந்திய கலைஞனோடு கைகோர்த்து அவர் நடத்தும் பாடத்தை இங்குள்ள ஹீரோக்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார். கண்ணில் தாயையும், முகத்தில் தந்தையையும் வைத்துக் கொண்டு அக்ஷரா பின்னியெடுக்கிறார். அமிதாப், தனுஷ் இருவருக்கும் மத்தியில் நின்று இருவருக்குமே தண்ணி காட்டியிருக்கிறார். ஈகோ தலைக்கேறி ஆடும் அமிதாப்பிடம் விஸ்கி தத்துவம் சொல்லி ஈகோவை உடைக்கிற ஒரு காட்சி போதும்.
எத்தனை வருடமாயிற்று இப்படி ஒரு இளையராஜாவைப் பார்த்து. அவரின் பின்னணி இசைதான் சப் டைட்டில் புரியாதவனுக்கும் கதை சொல்கிறது. வாசிக்க வேண்டிய இடத்தில் வாசித்து, மவுனிக்க வேண்டிய இடத்தில் மவுனித்து ஷமிதாப்பை உயர்த்திப் பிடிக்கிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு ஷமிதாப் ஒரு சினிமா என்பதையே மறக்கடிக்க வைத்து கதைக்குள் இழுத்துச் சொல்கிறது.
ஷமிதாப்பில் குறையே இல்லியாப்பு... என்று கேட்பது புரிகிறது. நிறைய இருக்கு. வாய்பேச முடியாத ஒரு கிராமத்தான் மளமளவென சினிமா ஹீரோவது அக்மார்க் சினிமாத்தனம்தான். கோடிகள் புரளும்போதும் அமிதாப் கல்லறை தோட்டத்திலேயே காலம் கழிப்பது லாஜிக் இல்லாத விஷயம்தான். அதற்காக ஷமிதாப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஷமிதாப் வடகலைக்கும், தென்கலைக்கும் பாலம் அமைத்தவன் என்பதை மறுக்கவும் முடியாது

No comments:
Post a Comment